கன்னியாகுமரி
அழகு நிலைய உரிமையாளர் உள்பட 2 பேர் பலி
|கன்னியாகுமரி அருகே அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன. இந்த விபத்தில் அழகு நிலைய உரிமையாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கன்னியாகுமரி அருகே அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன. இந்த விபத்தில் அழகு நிலைய உரிமையாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
2 பேர் பலி
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 37). இவர் எலெக்டிரானிக் தராசு பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவருடைய நண்பர் ஜான்சன் (46). இவர் நாகர்கோவில் டபிள்யு.சி.சி. ரோட்டில் ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வந்தார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று காலையில் பாஸ்கர் கன்னியாகுமரியில் எலெக்ட்ரானிக் தராசை பழுது நீக்கும் பணிக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அவருடன் ஜான்சனும் சென்றார். அவர்கள் கொட்டாரம் அரசு ஆஸ்பத்திரி அருகே வரும் போது, எதிரே கன்னியாகுமரியில் இ்ருந்து களியக்காவிளை நோக்கி அரசு பஸ் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் இ்ரண்டும் மோதிக்கொண்டன. இதில் பாஸ்கரன், ஜான்சன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம்அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, பாஸ்கர், ஜான்சன் ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக கூறினார்.
விசாரணை
இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அருமனையை சேர்ந்த பஸ் டிரைவர் அஜெய்குமார் (42) என்பவர் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.