விருதுநகர்
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலி
|வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லை சேர்ந்தவர் அருள்குமரவேல் (வயது 50). இவர் எம்.புதுப்பட்டியில் இவரது சகோதரர் வெங்கடேசனுடன் இணைந்து நோட்டுப் புத்தக தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். சம்பவத்தன்று சென்னிமலை கோவிலுக்கு ெரயிலில் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகர் ெரயில் நிலையத்திற்கு வந்தார். விருதுநகர் சிவகாசி ரோட்டில் குமாரலிங்கபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென அருள்குமரவேல் இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆமத்தூர் போலீசார், அருள்குமரவேல் சகோதரர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக விருதுநகர்அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அங்கிருந்து தனது சகோதரரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்ட அருள்குமாரவேல் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் மதிவாணன் (22). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வத்திராயிருப்பு பகுதியில் நிதி நிறுவன வேலைகளை முடித்துவிட்டு சத்திரப்பட்டி ரோட்டில் மொட்டமலை அருகே செல்லும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் சோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.