வலிப்பு வந்ததுபோல் நடித்து வியாபாரியிடம் வழிப்பறி செய்துவிட்டு தப்பியபோது பைக் விபத்தில் 2 பேர் பலி
|தேங்காய் வியாபாரியிடம் வழிப்பறி செய்துவிட்டு பைக்கில் தப்பிய 2 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
நாமக்கல்,
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காமராஜபுரம் குறிச்சியை சேர்ந்தவர் பொன்னர் (வயது 31). இவர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நாமக்கல்லில் இருந்து காட்டுப்புத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மோகனூர் அடுத்த அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே சென்றபோது, சாலையில் மர்ம நபர் ஒருவர் வலிப்பு வந்ததுபோல் துடித்துள்ளார். அவரின் அருகே மற்றொருவர் நின்றுக்கொண்டு பிறரின் உதவியை கேட்டு கூச்சலிட்டார். அதை நம்பி பைக்கை நிறுத்திவிட்டு பொன்னர் இறங்கி பார்த்தார்.
அப்போது திடீரென இருவரும் சேர்ந்து பொன்னரை கடுமையாக தாக்கியதோடு, அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம், செல்போன் மற்றும் பைக் சாவியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதையடுத்து பொன்னர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே பொன்னரிடம் வழிப்பறி செய்துவிட்டு பைக்கில் தப்பிய இருவரும் நாமக்கல்-மோகனூர் சாலையில் தனியார் கல்லூரி அருகே எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவருக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பலியானவர்கள் நாமக்கல் கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த லாரி பட்டறை கூலித்தொழிலாளி நவீன் (25), சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த மாரி (25) என்பதும், அவர்கள் பொன்னரிடம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.
இருவரும் பைக்கில் தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி பலியானதும் உறுதியானது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.