கிருஷ்ணகிரி
ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
|கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதிகளில் ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
10 வயது சிறுவன்
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அருகே உள்ள அத்திகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் ஹேமந்த் (வயது 10). இவன் மோரமடுகு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தான். கடந்த 16-ந் தேதி முனியகவுண்டன் ஏரியில் சிறுவன் ஹேமந்த் குளிக்க சென்றான். அப்போது தண்ணீரில் மூழ்கி அவன் பலியானான்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூதாட்டி
இதேபோல, பர்கூர் அருகே உள்ள சின்ன ஒரப்பம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி பாஞ்சாலை (68). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 15-ந் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அங்குள்ள ஏரியில் தவறி விழுந்தார். இதில் பாஞ்சாலை தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.