திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது
|செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
சென்னை,
தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வரும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நேசபிரபு என்பவரை நேற்றிரவு 5 பேர் கொண்ட மர்மநபர்கள் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த நேசபிரபு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மர்மநபர்கள் பின்தொடர்ந்து வருவது குறித்தும், தாக்குவது குறித்தும் காவல்துறையின் அவசர எண்ணை தொடர்பு கொண்டு நேசபிரபு கூறியபோது காவல்துறை அதிகாரி அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரவீன் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.