< Back
மாநில செய்திகள்
பார் ஊழியர் கொலையில் 2 பேர் கைது
விருதுநகர்
மாநில செய்திகள்

பார் ஊழியர் கொலையில் 2 பேர் கைது

தினத்தந்தி
|
12 Oct 2023 1:35 AM IST

சாத்தூரில் பார் ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் ைகது செய்யப்பட்டனர். நிவாரணம் கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர் பஸ் நிலையம் அருகில் ரெயில்நிலையம் செல்லும் ரோட்டில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் பார் செயல்பட்டு வருகிறது.

இதில் இருக்கன்குடியை சேர்ந்த காந்திராஜன் (வயது 35) என்பவர் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் 11.45 மணிக்கு டாஸ்மாக்கடையின் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த 2 பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நத்தத்துப்பட்டியை சேர்ந்த பாக்கியராஜ் மகன் கிருஷ்ணபிரபு (23), மகாலிங்கம் மகன் மகாலிங்க சுந்தரமூர்த்தி (22)ஆகிய 2 பேரும் காந்திராஜனை கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இரு தரப்பை சேர்ந்த உறவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. காந்திராஜன் உடல் பிரேத பரிசோனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்ற போது உரிய நிவாரணம் வழங்காமல் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று காந்திராஜன் உறவினர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பின்னர் உறவினர்கள் சிலர் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ஆர்.டி.ஓ. சிவக்குமார், தாசில்தார் லோகநாதன் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் வீடு, அரசு வேலை உள்ளிட்ட நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். பின்னர் காந்திராஜன் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்