செங்கல்பட்டு
ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது
|ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் வீராணம் சாலையைச் சேர்ந்தவர் கமல கிருஷ்ணன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கல்பனா (வயது 30). இவர் திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுக்கூட பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 12-ந்தேதி பணி முடிந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து செங்கல்பட்டு சாலையை நோக்கி சிறுங்குன்றம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கல்பனாவிடம் முகவரி கேட்பது போல் வந்து பேச்சு கொடுத்து அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்து கல்பனா திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
விசாரணையில் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த கரி என்ற கரிசெல்வன் (வயது 25), எடர்குன்றம் கிராமத்தை சேர்ந்த திருப்பதி (27) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டிருப்பதும் அவர்களிடம் இருந்து 6 செல்போன், 2 மோட்டார் சைக்கிள், 3 பவுன் நகை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.