< Back
மாநில செய்திகள்
தொழிலாளியை கொன்ற வழக்கில் 2 பேர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தொழிலாளியை கொன்ற வழக்கில் 2 பேர் கைது

தினத்தந்தி
|
4 March 2023 8:35 PM IST

திண்டுக்கல்லில் தலையில் கல்லை போட்டு, தொழிலாளியை கொன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி படுகொலை

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை சேர்ந்தவர் வீரன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு தனம் என்ற மனைவி, 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். வீரனின் தந்தை சின்னு, திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைபேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இதனால் வீரன் திண்டுக்கல்லுக்கு வரும்போது, தனது தந்தையை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் வீரன் தனது தந்தையை பார்ப்பதற்கு ஸ்கூட்டரில் பாரதிபுரத்துக்கு சென்றார். அங்குள்ள சுகாதார வளாகம் அருகே வீரன் சென்ற போது, அந்த வழியாக வந்த 2 பேர் அவருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கயிற்றால் வீரனின் கழுத்தை இறுக்கி, தலையில் கல்லைபோட்டு அவரை கொன்றனர்.

2 பேர் கைது

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்களான காளிதாஸ் (28), அன்பில்ராஜ் (25) ஆகியோர் வீரனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் காளிதாஸ், அன்பில்ராஜ் ஆகியோர் மதுபோதையில் அந்த பகுதியில் நடந்து சென்று உள்ளனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த வீரனிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் மருத்துவ பரிசோதனை செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்