காஞ்சிபுரம்
ஒரகடம் அருகே நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது
|ஒரகடம் அருகே நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் ஊராட்சியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 35). இவருடைய மனைவி லதா (27). மளிகை கடை நடத்தி வருகிறார். ஜெகநாதன் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி லதா கடையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்த ஒருவர் கடையில் பொருட்கள் வாங்குவது போல் லதா அணிந்து இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்தவனுடன் தப்பிச்சென்றார்.
அப்போது லதா கத்தி கூச்சலிட்டுள்ளார் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அதற்குள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து லதா ஒரகடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
நகை பறிப்பில் தொடர்புடைய நபரின் மோட்டார் சைக்கிள் வாகன எண் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
பின்னர் அங்கு சென்ற போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட கவுதம் (28) என்பவரை கைது செய்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில் கவுதமின் நண்பரான சென்னை வாஷர்மேன்பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதம் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 6 பவுன் தங்கச்சங்கிலியை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.