திருச்சி
உண்டியல் காணிக்கை எண்ணும்போது தங்க நகைகளை திருடிய 2 பேர் கைது
|சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்க நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்க நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காணிக்கைகள் எண்ணும் பணி
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் நடந்த இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
முன்னதாக உண்டியலில் இருந்த பணம், வெள்ளி, தங்க நகைகளை தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுவதற்காக ஆத்ம சங்கம் என்ற அமைப்பின் செந்தண்ணீர் புரத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் மூலம் கடலூர், பண்ருட்டி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் இருந்து 16 பேர் அழைத்து வரப்பட்டு இருந்தனர்.
2 பேர் கைது
இந்நிலையில், காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்த பண்ருட்டி அருகே உள்ள கலசப்பாக்கம் அண்ணாநகரை சேர்ந்த சக்திவேல் மகன் அஜய் (வயது 23), கடலூர் மாவட்டம் பெத்தனாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த தனவேல் மகன் ஜெயக்குமார் (29) ஆகிய 2 பேர் அடிக்கடி கழிவறைக்கு சென்று வந்தனர். இதனை யடுத்து அவர்களை சந்தேகத்தின் பேரில் கோவில் செயல் அலுவலர்கள் பொன்மாரிமுத்து, சவுந்்தரபாண்டியன் ஆகியோர் தனியாக அழைத்து சோதனை செய்தனர். சோதனையில் அஜய் 41 கிராம் தங்கத்தையும், ஜெயக்குமார் 6 கிராம் தங்கத்தையும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரிடமும் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் சமயபுரம் போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் இருவரும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் சமயபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.