< Back
மாநில செய்திகள்
பிரபல நடிகை வீட்டில் திருடிய 2 பேர் கைது - டி.வி.யை கொண்டு செல்ல பா.ஜ.க. பிரமுகரின் காரை திருடியது அம்பலம்
சென்னை
மாநில செய்திகள்

பிரபல நடிகை வீட்டில் திருடிய 2 பேர் கைது - டி.வி.யை கொண்டு செல்ல பா.ஜ.க. பிரமுகரின் காரை திருடியது அம்பலம்

தினத்தந்தி
|
14 July 2023 4:14 PM IST

பிரபல நடிகை வீட்டில் டி.வி. மற்றும் மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருடிய டி.வி.யை கொண்டு செல்ல பா.ஜ.க. பிரமுகரின் காரை திருடியதும் தெரிந்தது.

'தில்லாலங்கடி' உள்ளிட்ட திரைப்படங்களிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை லதா ராவ். டி.வி. தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் ராஜ்கமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர தம்பதியான இவர்களுக்கு சொந்தமான பங்களா வீடு, சென்னை மதுரவாயல், கிருஷ்ணாநகர் 15-வது தெருவில் உள்ளது.

இந்த பங்களா வீட்டை சினிமா படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விட்டு வந்தனர். கடந்த 9-ந்தேதி இந்த பங்களா வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த விலை உயர்ந்த எல்.இ.டி. டி.வி., மின் மோட்டார் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

மேலும் அருகில் உள்ள பா.ஜ.க. பிரமுகர் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவருடைய காரும் திருடுபோனது. இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த காஜா மொய்தீன் (வயது 38), திருவொற்றியூரைச் சேர்ந்த அமீன் உதீன் (32) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நடிகையின் பங்களா வீட்டில் திருடிய எல்.இ.டி. டி.வி. மற்றும் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் திருடிய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

நடிகையின் பங்களா வீடு என்பதால் அதிக அளவில் பொருட்கள் இருக்கும் என நினைத்து திருட வந்த இருவரும், வீட்டுக்குள் புகுந்ததும் அங்கு டி.வி. மட்டும் இருந்ததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் பெரிய அளவிலான அந்த எல்.இ.டி. டி.வி. மற்றும் மின்மோட்டாரை திருடினர்.

திருடிய டி.வி.யை எடுத்து செல்ல வாகனம் இல்லாததால் அருகில் உள்ள பா.ஜ.க. பிரமுகர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த அவரது காரை திருடி அதில் டி.வி.யை கொண்டு சென்றதாக கைதான 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்