திருப்பத்தூர்
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
|ஏலகிரி மலையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை
ஏலகிரி மலை மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெகன் குமார் (வயது 33) தனது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளை திருடிச்சென்று விட்டனர்.
இது குறித்து ஜெகன் குமார், ஏலகிரி மலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருடிய மோட்டார்சைக்கிளுடன் மர்மநபர்கள் ஏலகிரிமலையை விட்டு வெளியேறி வரலாம் என்பதால் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் வாணியம்பாடி அருகே சின்ன வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் மகன் ஜெய் சஞ்சய் (வயது 19) மற்றும் சங்கர் என்பவரின் மகன் சக்திவேல் (20) என்பதும், ஜெகன்குமார் குறிப்பிட்ட மோட்டார்சைக்கிளை அவர்கள் திருடி வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து ஜெய்சஞ்சய் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.