திருவாரூர்
வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
|வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
திருத்துறைப்பூண்டியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
சோதனை
திருத்துறைப்பூண்டி பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், வேதாரண்யம் ரோடு, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர்.
வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை
அப்போது திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம் செட் அருகில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குறும்பலை சேர்ந்த தியாகராஜன் (வயது 39), வேலூர் மாவட்டம் பிச்சனூர்பேட்டையை சேர்ந்த வில்வநாதன் மகன் கோபிநாத் (24) ஆகியோர் என்பதும், 2 பேரும் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. 3 லட்சத்து 18 ஆயிரத்தையும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.