< Back
மாநில செய்திகள்
சுங்குவார்சத்திரம் அருகே வீடு கட்ட போலி பணி ஆணை வழங்கிய 2 பேர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே வீடு கட்ட போலி பணி ஆணை வழங்கிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
21 April 2023 2:50 PM IST

சுங்குவார்சத்திரம் அருகே வீடு கட்ட போலி பணி ஆணை வழங்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வீடு கட்டுவதற்கான பணி ஆணை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் தாமாகவே வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சுங்குவார்சத்திரம் அருகே சிறு மாங்காடு கிராமத்தில் சிறு மாங்காடு ஊராட்சி மன்ற தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. துணை செயலாளருமான சுபரஞ்சனியின் கணவர் கன்னியப்பன், காஞ்சீபுரம் மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக என்ஜினீயரான அழகு பொன்னையாவிடம் கடந்த 12-ந்தேதி சிறு மாங்காடு கிராமத்தில் 19 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பணி ஆணைகளை வழங்கினார். அவற்றை என்ஜினீயர் அழகு பொன்னையா ஆய்வு செய்தார்.

கைது

அப்போது அனைத்து பணி ஆணையும் போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து என்ஜினீயர் அழகு பொன்னையா காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் தான் பணிக்கு சேர்ந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் இதுவரை சிறு மாங்காடு கிராமத்திற்கு எந்த ஒரு பணி ஆணையும் தன்னால் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் தன்னுடைய பெயரில் பணி ஆணை போலியாக தயாரித்து பயனாளிகளிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளதாக சிறுமாங்காடு ஊராட்சி மன்ற தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. துணை செயலாளருமான சுபரஞ்சனியின் கணவர் கன்னியப்பன் மற்றும் சிருமாங்காடு 5-வது வார்டு உறுப்பினர் பிலோமினாவின் கணவர் வாசு ஆகியோர் மீது புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்