தர்மபுரி
அம்மன் கோவிலில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது
|மாரண்டஅள்ளி அருகே அம்மன் கோவிலில் நகை, பணம் திருடிய 2 பேரை போலீசார் வாகன சோதனையில் கைது செய்தனர்.
மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சக்கிலி நத்தம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 18-ந் தேதி இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி 2 பவுன், 200 கிராம் வெள்ளி பொருட்கள், குத்துவிளக்குகள், ஐம்பொன் அம்மன் சிலைகள் மற்றும் கோவில் உண்டியல் கொள்ளை போனது. இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாரண்டஅள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவா்கள் சக்கிலி நத்தத்தை சேர்ந்த வரதராஜன் மகன் சதீஷ் (வயது 22), பாலக்கோட்டை அடுத்த தண்டுகாரன் அள்ளி பகுதியை சேர்ந்த சக்தியின் மகன் சூர்யா (19) ஆகியோர் கோவிலில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பவுன் அம்மன் தாலி, வெள்ளிப் பொருட்கள், சாமி சிலை, குத்துவிளக்கு, ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.