< Back
மாநில செய்திகள்
2 சுங்கச்சாவடிகளுக்கு அபராதம் விதிப்பு
சேலம்
மாநில செய்திகள்

2 சுங்கச்சாவடிகளுக்கு அபராதம் விதிப்பு

தினத்தந்தி
|
22 Jun 2023 1:00 AM IST

2 முறை கட்டணம் வசூல் செய்த விவகாரத்தில் 2 சுங்கச்சாவடிகளுக்கு அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காரில் சென்றவருக்கு2 முறை கட்டணம் வசூல் செய்த விவகாரத்தில் 2 சுங்கச்சாவடிகளுக்கு அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சுங்கச்சாவடி

சேலம் 4 ரோடு பகுதியை சேர்ந்தவர் சபரிமணி. இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றார். அப்போது ரூ.50 அவருடைய பாஸ்டாக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு 3 நாட்கள் கழித்து மீண்டும் ரூ.235 பிடித்தம் செய்யப்பட்டதாகவும் அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் (மெசேஜ்) வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சபரிமணி, சுங்கச்சாவடி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் பிடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதனிடையே, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு அவர் காரில் சென்றார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் சுங்கச்சாவடியில் ரூ.50 கட்டணம் செலுத்திய அவரது கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டது. பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் ரூ.40 வீரசோழபுரம் சுங்கச்சாவடியில் பிடித்தம் செய்ததாக தகவல் வந்தது.

அபராதம் விதிப்பு

இதையடுத்து சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர் கேட்டபோது, சம்பந்தப்பட்ட தனியார் பாஸ்டாக்-ஐ தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய பிரேத மாநிலம் போபாலில் செயல்படும் அந்த பாஸ்டாக் நிறுவனத்திற்கு புகார் அனுப்பியும் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. இதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் தலைவர் அசோகனிடம் சபரிமணி புகார் செய்தார்.

இதையடுத்து மேட்டுப்பட்டி மற்றும் வீரசோழபுரம் சுங்கச்சாவடிகளுக்கு எதிராக சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் மற்றும் பாஸ்டாக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், நுகர்வோர் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.275, சேவை குறைபாடு, நியாயமற்ற வர்த்தக முறை, மன உளைச்சல், வழக்கு செலவினை தொகை ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை மேட்டுப்பட்டி, வீரசோழபுரம் சுங்கச்சாவடி நிர்வாகம் 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், சேவை குறைபாடு காரணமாக பாஸ்டாக் நிர்வாகத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

மேலும் செய்திகள்