சென்னை
சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகள் திடீர் சாவு - இலங்கையைச் சேர்ந்தவர்கள்
|சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 இலங்கை பயணிகள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான முனையத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் நகருக்கு செல்லும் விமானத்தில் செல்ல வந்த இலங்கையைச் சேர்ந்த சிவகஜன்லிட்டி (வயது 43) என்ற பெண், பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர் வந்து பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் இலங்கை கொழும்பு நகரில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு விமானம் வந்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த ஜெயக்குமார் (48) தனது மனைவியுடன் பிசினஸ் விசாவில் சென்னை வந்தார். அவர் குடியுரிமைச் சோதனை முடித்து விட்டு சுங்கச்சோதனை பிரிவுக்கு வந்து கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். விமான நிலைய மருத்துவ குழுவினர் வந்து பரிசோதனை செய்ததில் அவரும் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இலங்கை பயணிகள் உயிரிழந்தது பற்றி சென்னையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே இருந்த பழைய விமான முனையத்தில் இதேபோல் பயணிகள் உயிரிழப்பு அவ்வப்போது நடந்து வந்தது. இந்த நிலையில் புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு முதல் முறையாக ஒரே நாளில் அடுத்தடுத்து 2 இலங்கை பயணிகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.