< Back
மாநில செய்திகள்
குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் 2 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
சென்னை
மாநில செய்திகள்

குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் 2 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
4 Sept 2023 3:58 PM IST

குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் 2 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

சென்னை வேளச்சேரி டான்சி நகரைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். கிண்டியில் சட்ட ஆலோசனை நிறுவனம் நடத்தி வரும் இவர், வேளச்சேரியில் உள்ள தனது வீடடுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு கோரி சென்னை இந்திராநகரில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.

அதற்கு அங்கிருந்த அலுவலர்கள், இணைப்புக்கான கட்டணம் 37 ஆயிரத்து 541 ரூபாயை செலுத்த கூறினர். அதன்படி, ஜேசுராஜ் பணத்தை செலுத்தினார். இருந்தபோதிலும் இணைப்பு வழங்கப்படவில்லை. ஜேசுராஜை தொடர்பு கொண்ட குடிநீர் வடிகால் வாரியத்தின் வேளச்சேரி பகுதி கள அலுவலர்கள் செல்லத்துரை (வயது 58), ஜான் என்ற ஜான் பொன்னையா (50) ஆகியோர் லஞ்சமாக ரூ.16 ஆயிரம் கேட்டனர். இதுகுறித்து ஜேசுராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி லஞ்சப்பணம் ரூ.16 ஆயிரத்தை ஜேசுராஜ் கொடுத்த போது அதை பெற்றுக்கொண்ட செல்லத்துரை, ஜான் பொன்னையா ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மணிமேகலை முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செல்லத்துரை, ஜான் பொன்னையா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி இருவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை, மொத்தம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்