திருச்சி
பெண்ணிடம் பேசுவதை கண்டித்து வடமாநில வாலிபர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து
|பெண்ணிடம் பேசுவதை கண்டித்து வடமாநில வாலிபர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
கத்திக்குத்து
பீகார் மாநிலம் சேபுரா மாவட்டம் பதேபூர் பகுதியை சேர்ந்தவர் பப்புகுமார்(வயது 37). இவரது சகோதரர் பப்லு(33). இவர்கள் இருவரும் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அண்ணாநகர்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த கம்பெனியில் சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்திநகர் பகுதியை சேர்ந்த பரணிதரன்(26) என்பவரின் மனைவி தாமரைச்செல்வியும் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பரணிதரனும், அவரது நண்பர் பாண்டியராஜனும் செல்போன் மூலம் பப்புகுமாரையும், அவரது சகோதரரையும் சங்கியாண்டபுரம் அண்ணாநகர் ரோட்டுக்கு வரும்படி அழைத்தனர். அவர்கள் அங்கு வந்ததும், பரணிதரன், பப்புகுமாரை பார்த்து தனது மனைவியிடம் பேசுவதை நிறுத்தும்படி கூறி மிரட்டினார். அப்போது அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற பப்லுவுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இது குறித்து பப்புகுமார் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, பாண்டியராஜனை கைது செய்தனர். மேலும், பரணிதரனை தேடி வருகிறார்கள்.
கைது
*மணப்பாறை ஏட்டு தெரு குப்பமுத்து சந்து பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி(51). இவர் நேற்று கணவருடன் மொபட்டில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாத்திரை வாங்கி சென்று கொண்டு இருந்தபோது, மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கிழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*தச்சங்குறிச்சி 4 ரோடு பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்றுள்ளார். இதனை அறிந்த காணக்கிளியநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
*உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரம் பஸ் நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடந்த 65 வயது மதிக்கத்தக்க ஆணின் உடலை உப்பிலியபுரம் போலீசார் கைப்பற்றி அவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் லாவண்யா(22). நர்சிங் மாணவியான இவர் வயிற்று வலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
*திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் தண்டாயுதம் மகன் லட்சுமணன்(21). புரோட்டா மாஸ்டரான இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அமுதா(65). இவர் நேற்று முன்தினம் இரவு களைப்பாக இருக்கிறது என்று அந்த ஊரில் உள்ள பெட்டிக்கடையில் சோடா வாங்குவதற்காக வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் கிடந்த கல் தடுக்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
*மண்ணச்சநல்லூர் அடுத்த மூவராயன்பாளையம் கீழூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் ஹரிகிருஷ்ணன்(23). ஸ்ரீரங்கத்தில் பூ மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில் தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் பா.ம.க. நிர்வாகி கைது
*திருச்சி மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் உமாநாத். இவர் புத்தூர் அருகே வணிக வளாகத்தில் கட்சி அலுவலகம் வைத்துள்ளார். இவரது கட்சி அலுவலகத்தை காலி செய்யும்படி கட்டிட உரிமையாளர் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று கட்சி அலுவலக பூட்டை உடைத்து அங்கிருந்த தளவாட பொருட்களை திருடிச்சென்றுவிட்டதாக உமாநாத் உறையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் இந்த சம்பவத்தில் பா.ம.க. முன்னாள் நிர்வாகியும், ஆம்புலன்ஸ் தொழில் நடத்தி வருபவருமான பிரபு என்ற பிரபாகரன் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
* திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த தஞ்சையை சேர்ந்த ராஜேஷ் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.