சென்னை
தாம்பரம் சானடோரியம் சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.48 கோடியில் 2 புதிய கட்டிடங்கள் - மத்திய மந்திரி திறந்து வைத்தார்
|தாம்பரம் சானடோரியம் சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.48 கோடியில் 2 புதிய கட்டிடங்களை மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்.
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.13 கோடியில் அமைக்கப்பட்ட மத்திய ஆராய்ச்சி குழுமத்தின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.35 கோடியில் அயோத்திதாச பண்டிதர் ஆஸ்பத்திரி புதிய புறநோயாளிகள் பிரிவு விரிவாக்க கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
விழாவில் மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகம், கப்பல், நீர்வழி போக்குவரத்துத்துறை மந்திரி சர்பானந்த சோனாவால் கலந்துகொண்டு 2 புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார். பின்னர் மத்திய ஆராய்ச்சி குழுமத்தின் சாதனை குறித்த குறிப்பேட்டை வெளியிட்டதுடன், நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கும் அமுக்கரா சூரணம் மாத்திரையை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோருக்கு வழங்கினார். அத்துடன் புதியதாக திறக்கப்பட்ட கட்டிடத்தில் தேசிய கொடியையும் ஏற்றி வைத்தார்.
இதில் ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் பிரமோத்குமார் பாடக் , தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கெண்டனர். முன்னதாக மத்திய ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் கனகவல்லி வரவேற்றார். முடிவில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மீனாகுமாரி நன்றி கூறினார்.