புதுக்கோட்டை
கள்ள நோட்டு வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது
|புதுக்கோட்டை அருகே கள்ளநோட்டு வழக்கில் மேலும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ள நோட்டு
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மது வாங்க அசேன் முகமது மற்றும் ஹிமாயூன் ஆகிய 2 பேர் வந்தனர். அவர்கள் மது வாங்குவதற்காக 500 ரூபாய் கள்ள நோட்டை டாஸ்மாக் ஊழியரிடம் கொடுத்தனர். இதைவாங்கி பார்த்த போது, 500 ரூபாய் கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து டாஸ்மாக் ஊழியர் இதுகுறித்து மணமேல்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து அசேன் முகமது, ஹிமாயூன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தனிப்படை
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தொடர்ந்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். அதன்படி கோட்டைப்பட்டினம் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு கவுதம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் கைது
இந்நிலையில், கள்ள நோட்டுகளை வினியோகம் செய்த முக்கிய குற்றவாளிகளான கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நூர்முகமது (வயது 22) மற்றும், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நூர்முகமது, ராேஜஸ்வரன் ஆகிய 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தொடர் கள்ளநோட்டு வேட்டை நடைபெறும் என்றும், தொடர்ந்து குற்றச்செயல் செய்வோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.