விழுப்புரம்
போதை ஊசி, மருந்து விற்ற மேலும் 2 வாலிபர்கள் கைது
|திண்டிவனத்தில் போதை ஊசி, மருந்து விற்ற மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திண்டிவனம்:
திண்டிவனத்தில் போதை ஊசி மற்றும் போதை மருந்து விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் கடந்த 8-ந் தேதி 3 வாலிபர்களும், 10-ந் தேதி 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போதை ஊசிகள், போதை மருந்துகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் போதை ஊசி, போதை மருந்து விற்றதாக மேலும் 2 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
மேலும் 2 பேர் கைது
திண்டிவனம் நாகலாபுரம் சின்னதெருவை சேர்ந்த உதயகுமார் மகன் சூர்யா (வயது 20) என்பவரது வீட்டில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்த 30 போதை மாத்திரைகள், ஊசிகள், கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த போதை ஊசி மற்றும் மருந்தை பயன்படுத்தியதோடு விற்பனை செய்ததாக சூர்யா, இவரது நண்பரான கிடங்கல்-2 சிங்காரத்தோப்பை சேர்ந்த மதியழகன் மகன் பொற்செல்வன் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனத்தில் போதை ஊசி மற்றும் மருந்து விற்றதாக அடுத்தடுத்து வாலிபர்கள் கைதாகும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.