திருவள்ளூர்
மப்பேடு அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மேலும் 2 பெண்கள் பலி
|மப்பேடு அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மேலும் 2 பெண்கள் பலியானார்கள். சாவு எண்ணிக்கை 4 ஆனது.
ஆட்டோ கவிழ்ந்தது
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாமி (50), தேவி (45), கலைவாணி(40), மனோகரன், கஜலட்சுமி(40), பூங்கொடி(50).. இவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் வார சந்தை கடை அமைத்து விட்டு கடந்த 24-ந்தேதியன்று இரவு ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்தனர். காஞ்சீபுரம் புதுகேசவபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம்(45) ஆட்டோவை ஓட்டிச்சென்றார்.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மப்பேடு அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் வேகமாக வந்தபோது தடுப்பு வேலி இருப்பதை அறியாமல் வளைவில் திரும்பி உள்ளனர். அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாவு
இதில் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த தக்கோலம் கிராமத்தை சேர்ந்த சிவகாமி , தேவி இருவரும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பலியானார்கள். விபத்தில் காயமடைந்த கஜலட்சுமியை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கும் கலைவாணியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கும் பூங்கொடி மற்றும் ஆட்டோ டிரைவர் செல்வம் ஆகியோரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும் மனோகரனை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கஜலட்சுமி, பூங்கொடி ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்கள். இந்த விபத்து குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.