விழுப்புரம்
மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் மேலும் 2 பேர் கைது
|மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மரக்காணம்:
மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாபாரிகள் அமரன், ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, முத்து, குணசீலன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் சப்ளை செய்ததாக புதுச்சேரி பகுதியை சேர்ந்த பர்கத்துல்லா என்கிற ராஜா, ஏழுமலை, சென்னை ரசாயன ஆலை உரிமையாளர் இளையநம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 2 பேர் கைது
இந்தநிலையில் மெத்தனால் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்கிற பிரேம்குமார் (வயது 54), வானூர் அடுத்த பெரம்பை நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு என்கிற வெங்கடாஜலபதி (40) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் மூலம் மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.