< Back
மாநில செய்திகள்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது
மாநில செய்திகள்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

தினத்தந்தி
|
21 April 2023 3:44 PM IST

இருவரது வங்கி கணக்குகளில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக செயல்பட்டு வந்த ஹரீஷ், மாலதி ஆகியோரை போலீசார் விசாரணையில் எடுத்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுவரை இந்த விவகாரத்தில் தொடர்புடைய 11 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய ராஜா செந்தாமரை மற்றும் சந்திரகண்ணன் ஆகிய 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ராஜா செந்தாமரை ஆருத்ரா நிறுவனத்தில் கூடுதல் இயக்குனராக செயல்பட்டு வந்துள்ளார். மற்றொரு நபரான சந்திரகண்ணன் ஆருத்ரா நிறுவனத்தின் விளம்பர பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

மொத்தமாக இந்த வழக்கில் தற்போது வரை 13 பேர் கைதாகியுள்ளனர். இந்த வழக்கில் கைதாகியுள்ள சந்திரகண்ணன் என்பவரது அண்ணாநகர் வீட்டில் இருந்து 90 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ராஜா செந்தாமரை மற்றும் சந்திரகண்ணன் ஆகிய இருவரது வங்கி கணக்குகளில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.



மேலும் செய்திகள்