சென்னையில், மேலும் 2 நாய் இனக்கட்டுப்பாட்டு மையம் - மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி
|சென்னையில், மேலும் 2 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி, கால்நடை மருத்துவ பிரிவின் சார்பில் பிராணிகள் நல தன்னார்வலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் கடந்த 9-ந்தேதி ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ககன்தீப் சிங் பேடி பேசியபோது 'சென்னையில் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய மூன்று இடங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கிவருகின்றன, மேலும் கூடுதலாக இரண்டு நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது' என தெரிவித்தார்.
மேலும் பிராணிகள் நல தன்னார்வலர்கள் கூட்டத்தினை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்திடவும், நாய் இனக்கட்டுப்பாடு கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதம் ஒரு முறை நடத்திடவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் தெரு நாய்கள் இனக்கட்டுப்பாட்டு திட்ட செயல்பாடுகளை மேம்படுத்தவும் ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் இணை கமிஷனர் சங்கர்லால் குமாவத், மாநகர கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் பிராணிகள் நல தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.