< Back
மாநில செய்திகள்
ஆவடி அருகே பனிமூட்டம் காரணமாக விபத்து: பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து 2 லாரிகள் மோதல் - டிரைவர் பலி
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி அருகே பனிமூட்டம் காரணமாக விபத்து: பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து 2 லாரிகள் மோதல் - டிரைவர் பலி

தினத்தந்தி
|
15 Jan 2023 12:44 PM IST

ஆவடி அருகே பனிமூட்டம் காரணமாக சாலையோரம் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து மேலும் 2 லாரிகள் மோதியது. இதில் டிரைவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). கன்டெய்னர் லாரி டிரைவான இவர், வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் மீஞ்சூரில் இருந்து வண்டலூர் நோக்கி கன்டெய்னர் லாரியை ஓட்டிச்சென்றார்.

ஆவடியை அடுத்த திருமணம் கிராமம் அருகே திடீரென லாரியின் டயர் பஞ்சரானதால் சாலையோரமாக நிறுத்தினார். அதிகாலை நேரம் என்பதால் பனிமூட்டத்தால் லாரி நிற்பது தெரியாது என்பதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு சைகை காட்டியபடி நின்று கொண்டிருந்தார்.

அப்போது வண்டலூர் நோக்கி அதிவேகமாக தாமிர கம்பி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த திருப்பதி (27) என்பவர் ஓட்டி வந்தார். அருகில் வந்த பிறகுதான் சாலையோரம் கன்டெய்னர் லாரி நிறுத்தி இருப்பது திருப்பதிக்கு தெரிய வந்தது.

இதனால் அவர் உடனடியாக லாரியை பிரேக் பிடித்து நிறுத்தினார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, வந்த வேகத்தில் ஆகாஷ் மீது மோதி பஞ்சராகி நின்ற லாரி மீது மோதியது. இதில் ஆகாஷ், சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு லாரியுடன் இழுத்து செல்லப்பட்டார். அப்போது லாரி சக்கரத்தில் சிக்கிய ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் அதே திசையில் வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி, திருப்பதி ஓட்டிவந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் அந்த லாரியை ஒட்டி வந்த திருவேற்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் (46) என்பவரின் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருப்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்