< Back
மாநில செய்திகள்
சட்டக்கல்லூரி மாணவிகள் 2 பேர்,   விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மதுரை
மாநில செய்திகள்

சட்டக்கல்லூரி மாணவிகள் 2 பேர், விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
2 July 2022 1:54 AM IST

மதுரையில் உள்ள ஒரு லாட்ஜ் அறையில் விஷம் குடித்து சட்டக்கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு போராடிய அவர்களை கதவை உடைத்து மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் உள்ள ஒரு லாட்ஜ் அறையில் விஷம் குடித்து சட்டக்கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு போராடிய அவர்களை கதவை உடைத்து மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சட்டக்கல்லூரி மாணவிகள்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் அபி நந்தினி (வயது 22). திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஐஸ்வர்ய லட்சுமி (22). தோழிகளான இவர்கள் பள்ளி படிப்பு முடித்து சட்டக்கல்லூரியில் சேர முடிவு செய்தனர். அதில் ஐஸ்வர்ய லட்சுமிக்கு நெல்லை அரசு சட்டக்கல்லூரியிலும், அபி நந்தினிக்கு திருச்சி அரசு சட்டக்கல்லூரியிலும் இடம் கிடைத்து 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் மதுரையை சுற்றிப்பார்க்க வந்தனர். மதுரை மாவட்ட கோர்ட்டு எதிரே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்து, சில இடங்களுக்கு சென்றுள்ளனர்.

நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் இருவரும் லாட்ஜ் அறையில் இருந்து வெளியே வரவில்லை. எனவே லாட்ஜ் ஊழியர்கள் அறை கதவை தட்டி பார்த்தனர். கதவு திறக்கப்படாததால் அவர்கள் சந்தேகம் அடைந்து, ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அங்கு மாணவிகள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

தற்கொலை முயற்சி

உடனே லாட்ஜ் மேலாளர் அண்ணாநகர் போலீசாருக்கும், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அறை கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மாணவிகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.

மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய 2 மாணவிகளையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மயங்கிய நிலையில் உள்ளதால் மாணவிகள் எதற்காக விஷம் குடித்தனர் என்பது தெரியவில்லை. மயக்கம் ெதளிந்த பிறகு மாணவிகளிடம் விசாரணை நடத்திய பிறகே, அவர்களின் தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவரும்.

வெவ்வேறு கல்லூரிகள்

சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் போலீசார் கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு ஊரை சேர்ந்த அவர்கள் பள்ளியில் படிக்கும் போதே தோழிகளாக இருந்துள்ளனர். மேலும் சட்டக்கல்லூரியில் சேர முயன்ற அவர்களுக்கு வெவ்வேறு கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் அவர்கள் இருவரும் விடுமுறையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்தநிலையில் மதுரைக்கு வந்த அவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்