< Back
மாநில செய்திகள்
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி
தேனி
மாநில செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
30 Sept 2023 4:15 AM IST

பணத்தை ரெட்டிப்பாக்கி தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்திநகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 60). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கும், வருசநாடு வாலிப்பாறையை சேர்ந்த பார்த்திபன் (42) என்பவருக்கும் இடையே தொழில் ரீதியாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பார்த்திபன், ரவீந்திரனிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தால் அதனை ரெட்டிப்பாக்கி ரூ.3 லட்சமாக தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய ரவீந்திரனும் அதற்கு சம்மதித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 21-ந்தேதி அவரை வீரபாண்டியில், தப்புக்குண்டு சாலை பகுதிக்கு பார்த்திபன் வரவழைத்தார். அங்கு பார்த்திபனுடன், அவரது நண்பர்களான ஜிப்சன் செல்வசிங் என்ற சாம்சன் (46), வருசநாடு வாலிப்பாறை சேர்ந்த சின்னன் (48), பசும்பொன் (40), தர்மபுரி கோட்டூரை சேர்ந்த சுபாஷ் (43) ஆகியோர் இருந்தனர். அப்போது அவர்களிடம் ரூ.2 லட்சத்தை ரவீந்திரன் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட பார்த்திபன், ஓரிரு நாளில் ரூ.3 லட்சமாக தருவதாக கூறினார். ஆனால் அவர் கூறியபடி பணத்ைத திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து ரவீந்திரன் கேட்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. அப்போது தான் அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரவீந்திரன் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன், சாம்சன், சின்னன், பசும்பொன், சுபாஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் இதுபோன்று வேறு யாரிடமும் மோசடி செய்துள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்