< Back
மாநில செய்திகள்
தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாநில செய்திகள்

தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தினத்தந்தி
|
16 Nov 2023 8:31 PM IST

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னை,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மணக்கடவு கிராமம், ஆலங்காட்டுப்பிரிவு என்ற இடத்தில் இன்று (16.11.2023) மாலை டேங்கர் லாரியும், நான்கு சக்கர வானமும் நேருக்குநேர் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தாராபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 65), அவரது மனைவி செல்வி (வயது 50), கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், வஞ்சியம்மா நகரைச் சேர்ந்த தமிழ்மணி (வயது 50), அவரது மனைவி சித்ரா (வயது 45) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். மேலும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கலாராணி (வயது 55) என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்