தஞ்சாவூர்
கடையின் சுவரை துளையிட்டு ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை
|திருவோணம் அருகே மதுக்கடையின் சுவரை துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவோணம் அருகே மதுக்கடையின் சுவரை துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சுவரை துளையிட்டு துணிகரம்
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள திப்பன்விடுதி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையினை நேற்று முன்தினம் இரவு விற்பனையாளர்கள் பூட்டிவிட்டு புறப்பட்டு சென்றனர். நேற்று காலை மதுக்கடையை திறக்க ஊழியர்கள் வந்த போது மதுக்கடையில் இருந்த மது பாட்டில்கள் மாயமாகி இருந்தது.
பிறகு ஊழியர்கள் கடையை சுற்றிப் பார்த்தபோது கடையின் சுவரை துளை போடப்பட்டு இருந்ததை பார்த்தனர். மர்ம நபர்கள் கடையின் சுவரை துளையிட்டு கடைக்குள் இருந்த விலை உயர்ந்த மது பாட்டில்களை கொள்ளையடித்து வாகனத்தில் கடத்தி சென்றது தெரியவந்தது.
ரூ.2 லட்சம் மதிப்பு
இது குறித்து மதுக்கடையின் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அதேபோல் டாஸ்மாக் அதிகாரிகள் கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மதுபாட்டில்கள் குறித்து கணக்கெடுப்பு பணியினை மேற்கொண்டனர். இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுதொடர்பாக மதுக்கடையின் மேற்பார்வையாளர் புகழேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுவரை துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.