< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பலி

தினத்தந்தி
|
28 Sept 2023 5:46 PM IST

கும்மிடிப்பூண்டியில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத அவர்கள் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சார ரெயில் மோதியது

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள வள்ளியம்மை நகரையொட்டிய ரெயில் தண்டவாளத்தை நேற்று அதிகாலை 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரெயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீல நிற முழுக்கை சட்டையும், கறுப்பு நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மின்சார ரெயில் மோதி உயிரிழந்த அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ரெயிவே போலீசார் அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதைபோல கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற 50 வயது மதிக்கதக்க ஒருவர் கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை நோக்கிச்சென்ற புறநகர் மின்சார ரெயிலில் அடிப்பட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த விசாரணையில் அருகே உள்ள இரும்பு உருக்கு தொழிற்சாலை ஏதாவது ஒன்றில் அவர் வேலை செய்து வந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

வெள்ளை நிற முழுக்கை சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்கிற விவரம் தெரியவில்லை. சம்பவ இடத்தில் இருந்து உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்