< Back
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழாவில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழாவில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

தினத்தந்தி
|
2 Sept 2022 2:29 AM IST

விநாயகர் சதுர்த்தி விழாவில் சப்பரத்தை இழுத்துச் சென்றபோது, டிரான்ஸ்பார்மரில் உரசியதில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் சோமசுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலையில் அந்த சிலையை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதாவது, 2 சக்கரத்துடன் கூடிய வண்டியில் சப்பரத்தை வைத்து இழுத்து வந்தனர்.

கோவில் அருகே இரவு 10.15 மணி அளவில் ஊர்வலம் வந்தது. உடனே விநாயகர் சிலையை அங்குள்ள முச்சந்தியில் இறக்கி வைத்துவிட்டு, அருகில் உள்ள மற்றொரு தெருவில் சப்பரத்துடன் கூடிய வண்டியை கொண்டுபோய் நிறுத்துவதற்காக இழுத்துச்சென்றனர்.

2 பேர் பலி

அந்த பாதை மிகவும் குறுகலானது. அங்கு மின்சார டிரான்ஸ்பார்மரும் உள்ளது. இந்தநிலையில் சப்பரத்தில் பொருத்தி இருந்த அலங்கார இரும்பு வளைவின் ஒரு பகுதி டிரான்ஸ்பார்மர் மீது உரசியது. உடனே சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்தது.

இதில் சப்பரத்துடன் கூடிய வண்டியை இழுத்துச்சென்ற அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 33), முனீசுவரன் (24), செல்ல பாண்டி (45), செல்வம் (33), முப்பிடாதி (23) ஆகிய 5 பேரும் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடினர். இதில் மாரிமுத்து, முனீசுவரன் ஆகிய 2 பேரும் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் விநாயகர் சதுர்த்தி விழா நடந்த இடம் சோகமயமாகியது. இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி பலியான மாரிமுத்துவுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் செங்கல் சூளை நடத்தி வந்தார்.

முனீசுவரன் பட்டப்படிப்பு முடித்து விட்டு சிவகிரியில் உள்ள மருந்து கடையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் அஞ்சலி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாரிமுத்து, முனீசுவரன் ஆகியோரின் உடல்கள் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தன. அவர்களின் உடல்களுக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்