சென்னை
ஆவடி அருகே வெவ்வேறு இடங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 2 பேர் பலி
|ஆவடி அருகே வெவ்வேறு இடங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பெண் உள்பட 2 பேர் பலியாகினர். இறந்தவர்கள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி,
ஆவடிக்கும் இந்து கல்லூரி ரெயில் நிலையங்களுக்கும் இடையே நேற்று காலை சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக வந்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. உடலில் வெள்ளை நிறத்தில் வயலட் கலர் பூ போட்ட புடவையும், பிங்க் கலரில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.
அதேபோல் நேற்று காலை ஆவடிக்கும் இந்து கல்லூரி ரெயில் நிலையங்களுக்குமிடையே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சென்னையை நோக்கி வந்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் ஜீன்ஸ் துணியில் கோட் மற்றும் சிமெண்ட் கலரில் பேண்டும் காலில் ஷூ அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இந்த 2 சம்பவம் குறித்து ஆவடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.