செங்கல்பட்டு
கல்பாக்கம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 2 பேர் சாவு
|கல்பாக்கம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 30). திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (31). இவர்கள் நேற்று அதிகாலை தங்கள் நண்பர்களான நரேஷ், கிஷோர், நிர்மல், கார்த்திக் ஆகியோருடன் காரில் சென்னை மாதவரம் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த காத்தான்கடை என்ற இடத்தில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் உள்ள மேம்பால தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் கார் நொறுங்கியது. காரில் பயணம் செய்த புருஷோத்தமன், முருகானந்தம் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நரேஷ், கிஷோர், நிர்மல், கார்த்திக் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூவத்தூர் போலீசார் இறந்து கிடந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.