திருவாரூர்
மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம்
|நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி நடந்த விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி நடந்த விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
ரெயில்வே கேட் மீது மோதல்
தஞ்சை மேலவீதியைச் சேர்ந்தவர் ராகேஷ் (வயது22). தஞ்சை மாவட்டம் பூண்டி சாலியத்தெருவை சேர்ந்தவர் ஹரிவெங்கடேஷ் (25). இருவரும் மோட்டார்சைக்கிளில் தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சம்பவத்தன்று இரவு சென்று கொண்டிருந்தனர். அதுசமயம் நீடாமங்கலம் அருகே ஆதனூரில் ரெயிலுக்காக மூடப்பட்டிருந்த ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் ரெயில்வே கேட் மீது மோதியது. தொடர்ந்து எதிரில் மோட்டார்சைக்கிளில் நின்று கொண்டிருந்த நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மீதும் மோட்டார்சைக்கிள் மோதியது.
சப்-இன்ஸ்பெக்டர் காயம்
இந்த விபத்தில் ராகேஷ் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளின் பின்புறம் உட்கார்ந்திருந்த ஹரிவெங்கடேஷ் கீழே விழுந்ததால் அவருக்கு தலையிலும், மோட்டார்சைக்கிள் மோதியதால் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியனுக்கு இடது முழங்கையிலும் படுகாயம் ஏற்பட்டது.
தலையில் காயம் அடைந்த ஹரிவெங்கடேஷ் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழனியன் தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.