< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் அதிக சக்தியுடைய 2 மோப்ப நாய்கள் - வரும் டிசம்பரில் பயன்படுத்த முடிவு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் அதிக சக்தியுடைய 2 மோப்ப நாய்கள் - வரும் டிசம்பரில் பயன்படுத்த முடிவு

தினத்தந்தி
|
1 Sept 2022 1:39 PM IST

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் அதிக சக்தியுடைய ‘பெல்ஜியம் மெலினோஸ்’ இனத்தைச் சேர்ந்த 2 மோப்ப நாய் குட்டிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் பயன்படுத்தப்பட உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் தங்களுக்கு உதவும் வகையில் மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனா். வெடி மருந்துகள், வெடிகுண்டு போன்ற அபாயகரமான பொருட்களை கண்டுபிடிக்க இந்த மோப்ப நாய்களை பயன்படுத்துகின்றனா்.

தற்போது சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய் பிரிவில் புதிய வரவாக பெல்ஜியம் நாட்டின் 'பெல்ஜியம் மெலினோஸ்' இனத்தைச் சேர்ந்த 2 நாய் குட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வகை நாய்கள், சர்வதேச அளவில் மோப்ப சக்தியில் அதிக சக்தியுடன் சிறந்து விளங்கக்கூடியவைகள். இந்திய விமான நிலைய ஆணையகத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் இவை சேர்க்கப்பட்டுள்ளன.

'பைரவா' மற்றும் 'வீரா' என இந்த மோப்ப நாய் குட்டிகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த நாய்குட்டிகள் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளிக்கு ஆறு மாத பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அங்கு வெடிபொருட்கள், வெடிகுண்டுகள், வெடி மருந்துகளை கண்டறியும் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மோப்ப பயிற்சியில் நாய் குட்டிகள் இரண்டும் சிறப்பாக செயல்படுவதாக அவற்றுக்கு பயிற்சி வழங்குவோர் தெரிவித்துள்ளனர்.

இந்த 2 நாய் குட்டிகளான 'பைரவா' மற்றும் 'வீரா' வரும் நவம்பர் மாத இறுதியில் 6 மாத கால பயிற்சியை நிறைவு செய்கின்றன.

அதன்பின்பு வரும் டிசம்பா் மாதம் முதல் வாரத்தில் அவைகள் சென்னை விமான நிலையத்தில் தங்களது பணியை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்