< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்: விபத்தில் காயம் அடைந்த  பெண்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
மாநில செய்திகள்

திண்டுக்கல்: விபத்தில் காயம் அடைந்த பெண்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி

தினத்தந்தி
|
27 July 2022 8:45 PM IST

விபத்தில் காயம் அடைந்த பெண்களுக்கு இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல்லில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

திண்டுக்கல்:

திண்டுக்கல் சவேரியார்பாளையத்தை சேர்ந்த ஜவகர் மனைவி லியோ (வயது 78). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அய்யலூருக்கு கூலி வேலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அரசு பஸ்சில் திண்டுக்கல்லுக்கு வந்தார்.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அவர் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது டிரைவர் திடீரென பஸ்சை இயக்கியதால் சக்கரத்தில் சிக்கிய லியோ படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து இழப்பீடு கேட்டு திண்டுக்கல் சிறப்பு சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வக்கீல் சாக்ரடீஸ் ஆஜராகி வாதாடினார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாமூண்டீஸ்வரி பிரபா, பாதிக்கப்பட்ட லியோவுக்கு இழப்பீடாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 889 வழங்கும்படி உத்தரவிட்டார்.

ஆனால் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நின்ற ஒரு அரசு பஸ்சை இன்று கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

அதேபோல் பழைய கன்னிவாடி அருகே உள்ள போடம்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி பாப்பாத்தி (45). இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு பன்றிமலை பகுதியில் தோட்ட வேலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு அரசு பஸ்சில் வந்தார்.

ஆனால் மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்தது. அதில் பாப்பாத்தி படுகாயம் அடைந்தார். மேலும் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் சிறப்பு சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வக்கீல் ராஜ்குமார் ஆஜராகி வாதாடினார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாமூண்டீஸ்வரி பிரபா, பாதிக்கப்பட்ட பாப்பாத்திக்கு இழப்பீடாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.91 ஆயிரத்து 964 வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நின்ற ஒரு அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

மேலும் செய்திகள்