கள்ளக்குறிச்சி
2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருக்கோவிலூரில் நின்று செல்லும்
|திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் வருகிற 25-ந் தேதி முதல் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
திருக்கோவிலூர்
பயணிகள் கோரிக்கை
விழுப்புரம்-காட்பாடி இடையே உள்ள ரெயில் பாதையில் அமைந்துள்ளது திருக்கோவிலூர் ரெயில் நிலையம். தற்போது இந்த ரெயில் நிலையத்தின் வழியாக 1 எக்ஸ்பிரஸ் மற்றும் 2 பயணிகள் ரெயில்கள், வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் புதுச்சேரி-மராட்டியம் தாதர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நின்று செல்கின்றன.
மேலும் மன்னார்குடி-திருப்பதி, விழுப்புரம்-புருலியா, விழுப்புரம்- கரக்பூர் மற்றும் திருப்பதி-ராமேஸ்வரம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்காமல் சென்று வருகின்றன. இந்த 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், ரெயில் பயணிகள் தொடர்ந்து ெரயில்வே அமைச்சகத்துக்கும், தெற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பியதோடு, கவன ஈர்ப்பு போராட்டமும் நடத்தினர்.
2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
இந்த நிலையில் வருகிற25-ந் தேதி முதல் மன்னார்குடி-திருப்பதி, விழுப்புரம்-புருலியாக ஆகிய 2 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்களும் திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மன்னார்குடியில் இருந்து வருகிற 25-ந் தேதி புறப்பட்டு வரும் மன்னார்குடி-திருப்பதி எக்ஸ்பிரஸ் திருக்கோவிலூர் ரெயில் நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்து 10.32-க்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் திருப்பதியில் இருந்து 26-ந் தேதி புறப்பட்டு மாலை 4.28 மணிக்கு திருக்கோவிலூருக்கு வந்து 4.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
அதேபோல் புருலியாவில் இருந்து புறப்பட்டு வரும் புருலியா-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் வருகிற 25-ந் தேதி மாலை 5.40 மணிக்கு திருக்கோவிலூருக்கு வந்து 5.42-க்கு விழுப்புரத்துக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் விழுப்புரத்தில் இருந்து வருகிற 27-ந் தேதி புறப்பட்டு வரும் விழுப்புரம்-புருலியா எக்ஸ்பிரஸ் பகல் 12.44 மணிக்கு திருக்கோவிலூருக்கு வந்து 12.46 மணிக்கு புருலியா புறப்பட்டு செல்லும்.
பயணிகள் மகிழ்ச்சி
இந்த 2 ரெயில்களும் திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வது பயணிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், நிற்காமல் சென்று கொண்டிருக்கும் திருப்பதி-ராமேஸ்வரம், விழுப்புரம்-கரக்பூர் ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரெயில்ககள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதோடு, மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட திருவண்ணாமலை-தாம்பரம் பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.