செங்கல்பட்டு
ஊரப்பாக்கத்தில் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி 2 என்ஜினீயர்கள் பலி
|ஊரப்பாக்கத்தில் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி 2 என்ஜினீயர்கள் பலியானார்கள்.
என்ஜினீயர்கள்
சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம், தேவராஜ் அவென்யூ முதல் குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் விக்னேஷ் (வயது 27). தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பரமசிவன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27), நண்பர்களான இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 12-ந்தேதி இரவு சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். ஊட்டியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் சுற்றி பார்த்து ரசித்தனர்.
சாவு
பின்னர் ஊட்டியில் இருந்து புறப்பட்டு மீண்டும் சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் ஊரப்பாக்கம் டீக்கடை பஸ் நிறுத்தம் அருகே வரும்போது சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விக்னேஷ் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த அவரது நண்பர் ராஜ்குமார் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ராஜ்குமாரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.