தென்காசி
காரில் பதுக்கிய 2 யானை தந்தங்கள் பறிமுதல்
|கடையநல்லூர் அருகே காரில் பதுக்கிய 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே யானை தந்தங்களை கடத்துவதாக நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை மண்டல வனஉயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு நெல்லை வனக்காவல் நிலைய வனச்சரக அலுவலர் லோக சுந்தரநாதன் தலைமையில் வனவர் சசிகுமார் அடங்கிய குழுவினர், கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரை பீட்டிற்குட்பட்ட மேட்டுக்கால் ரோடு, பொன்னாக்குடி கிராமம் குறவன்பாறை செல்லும் வழியில் கூட்டாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த பகுதியில் காருடன் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் வடகரை ஜாகிா்உசேன் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த பீர்முகம்மது (வயது 52) என்பதும், காைர சோதனை செய்தபோது, அதில் 14 கிலோ எடை கொண்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 யானை தந்தங்களை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து யானை தந்தங்கள், காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், பீர்முகம்மதுவை பிடித்து விசாரணைக்காக கடையநல்லூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இவருக்கு யானை தந்தங்களை கொடுத்தது யார்? அவர் எங்கே இருந்து வாங்கினார்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.