< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்

மொரப்பூர் அருகே கோவில் திருவிழாவில் பரிதாபம்:சாமி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து சிதறியதில் சிறுவன் உள்பட 2 பேர் பலிஒருவர் படுகாயம்

தினத்தந்தி
|
25 May 2023 12:30 AM IST

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே கோவில் திருவிழாவில் நடந்த சாமி ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்து சிதறியதில் சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கோவில் திருவிழா

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. சரக்கு வாகனத்தில் அம்மன் சிைல வைக்கப்பட்டு ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலத்தின்போது வெடிப்பதற்காக வாங்கிய பட்டாசுகளை சரக்கு வாகனத்தின் முன்புறம் வைத்திருந்தனர். சரக்கு வாகனத்தை அதே ஊரை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராகவேந்திரன்(வயது26) ஓட்டி சென்றார். வாகனத்தில் அதே ஊரை சேர்ந்த அசோகன் மகன் ஆகாஷ் (7) என்ற சிறுவனும் அமர்ந்து இருந்தான். அசோகன் வீதியில் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தார்.

பரிதாப சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு மின்கம்பியில் உரசி திரும்பி சாமி ஊர்வலம் சென்ற சரக்கு வாகனத்தின் மேல் விழுந்தது. இதில் வாகனத்தில் இருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி பட்டதில் அவை அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. இதனால் வாகனத்தில் இருந்த சிறுவன் ஆகாஷ், டிரைவர் ராகவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்து தூக்கி வீசப்பட்டனர். மேலும் அதே ஊரை சேர்ந்த ஆதி (50) என்பவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

பட்டாசு வெடித்ததால் சரக்கு வாகனம் சேதம் அடைந்ததோடு, அதில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளும் சேதமடைந்தன. இந்த வெடிவிபத்தில் சிறுவன் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதையடுத்து பொதுமக்கள் ராகவேந்திரனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

படுகாயமடைந்த ஆதி அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிறுவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்