'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் அவகாசம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
|பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள மறுவாய்ப்பு கேட்டு கோரிக்கை வந்த நிலையில், 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு இளநிலை நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி முதல் கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. சுமார் 20 லட்சம் பேர் வரை நாடு முழுவதும் விண்ணப்பப் பதிவு மேற்கொண்டுள்ளனர்.
விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில், தற்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள மறுவாய்ப்பு கேட்டு கோரிக்கை தேசிய தேர்வு முகமைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் தேசிய தேர்வு முகமை இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாளும் (புதன்கிழமை) என 2 நாட்களுக்கு அவகாசம் வழங்கியுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://nta.ac.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.