புதுக்கோட்டை
சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் 2-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு
|திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு 2-ந்தேதி நடக்கிறது.
சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்
திருமயத்தில் பிரசித்தி பெற்ற சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி அன்று அதிகாலை திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவை சேவையும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஆனந்த சயனம் அலங்காரமும், விஸ்வரூப தரிசனமும் நடைபெறும்.
சொர்க்கவாசல் திறப்பு
பின்னர் அதிகாலை 4.30 மணியளவில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சி அளிக்கிறார். அதன்பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சத்திய மூர்த்தி பெருமாளை சொர்க்கவாசலுக்கு அருகே பக்தர்கள் பல்லக்கில் கொண்டு செல்வார்கள்.
காலை 5 மணியளவில் சத்தியமூர்த்தி பெருமாள் ஆழ்வாருக்கு மோட்சம் கொடுக்க, பக்தர்களின் கோஷம் முழங்க சொர்க்கவாசல் கதவு திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், அறக்கட்டளையினரும் செய்து வருகின்றனர்.