சென்னை
பரங்கிமலை புனித தோமையார் தேவாலய பராமரிப்பு பணிக்கு ரூ.2 கோடி - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
|பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் தேவாலய பராமரிப்பு பணிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த பரங்கிமலையில் பழமையான புனித தோமையார் தேவாலயம் உள்ளது. 1523-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயம் பழமை மாறாமல் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தின் 500-வது ஆண்டு விழாவையொட்டி அங்கு செய்யப்பட உள்ள பணிகளை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார்.
அங்குள்ள பழமையான நினைவு சின்னங்கள், புனிதர் பட்டம் பெற்றவர்களின் பட்டயங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர் பழமையான தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார். அவருக்கு தேவாலயத்தின் வரலாற்று புத்தகம் வழங்கப்பட்டது. பின்னர் அங்கு செய்யப்பட்டு வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
அவருடன் தேவாலய அதிபர் மைக்கேல், பங்கு தந்தை அலெக்சாண்டர், மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலர் லலிதா ஆகியோர் இருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள பழமையான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் பராமரிப்பு பணிக்காக நிதியை ஒதுக்கி தந்து உள்ளார். இதில் முதற்கட்டமாக 1523-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 500 ஆண்டுகள் பழமையான புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிதியில் தேவாலயத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகளை பார்வையிட வந்தேன். இந்த பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று பங்கு தந்தையாரிடம் கேட்டுக்கொண்டேன்.
நாகூர் தர்காவுக்கும் ரூ.2 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.