திண்டுக்கல்
தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மோசடி
|தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மோசடி நடந்ததாக, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு கொடுத்தனர்.
தங்க நகை சேமிப்பு திட்டம்
திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் நகைகள் செய்து தருவதாக நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மோசடி செய்து விட்டதாக கூறி புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:-
திண்டுக்கல் கிழக்கு ரதவீதியில் ஒரு நகைக்கடை செயல்பட்டது. அந்த நகைக்கடையில் கடந்த ஆண்டு தங்க நகை சேமிப்பு திட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ரூ.500, ரூ.1,000, ரூ.2,000, ரூ.5,000 வீதம் 12 மாதங்கள் செலுத்தினால், செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகைகளை வாங்கி கொள்ளலாம். முதல் மாதத்திலேயே பரிசை தேர்வு செய்யலாம் என்று கூறினர்.
ரூ.2 கோடி மோசடி
இதனை நம்பி பலரும் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தினோம். அது மட்டுமின்றி எங்களுடைய நண்பர்கள், உறவினர்களையும் அந்த திட்டத்தில் சேர்த்து விட்டோம்.
இந்தநிலையில் கடந்த மாதத்தோடு 12 மாதங்கள் நிறைவுபெற்றது. இதையடுத்து 12 மாதங்கள் செலுத்திய தொகைக்கு ஏற்ப நகைகள் வாங்க கடைக்கு சென்றோம். ஆனால் நகைக்கடை திறக்கப்படாமல் பூட்டி கிடந்தது.
இதனால் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு நகையோ அல்லது பணமோ கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி புதிய டிசைன்களில் நகைகள் செய்வதற்கு பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தனர். இவ்வாறு பணம் கொடுத்த நபர்களுக்கும் நகைகள் செய்து கொடுக்கப்படவில்லை. அந்தவகையில் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.