கடலூர்
2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
|கடலூரில் தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்மானது.
கடலூர்
கடலூர் வண்டிப்பாளையம் அம்பேத்கர்நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). மின்மாற்றி அருகில் உள்ள இவரது குடிசை வீடு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ மள, மளவென பரவி பக்கத்து வீட்டை சேர்ந்த மரகதம் குடிசை வீட்டுக்கும் பரவி எரிய ஆரம்பித்தது.
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. வீடுகளில் இருந்த துணிமணிகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.