திருச்சி
அருவி தடாகத்தில் குதித்த 2 கல்லூரி மாணவர்கள் பலி
|அருவி தடாகத்தில் குதித்த 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
உப்பிலியபுரம்:
கல்லூரி மாணவர்கள்
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான பச்சைமலையில் மங்களம் அருவி உள்ளது. கோடை காலத்தில் நீரோட்டம் மிகவும் குறைந்ததால், இந்த அருவியில் குளிக்கவும், அப்பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டியை சேர்ந்தவர்கள் தமீம்(வயது 23), ஜெஸ்வந்த்(23), விசாந்த்(24). கல்லூரி மாணவர்களான இவர்களுக்கும், திருச்சி மாவட்டம் தா.பேட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஊட்டியில் இருந்து தா.பேட்டைக்கு நேற்று காலை காரில் வந்த 3 பேரும், அந்த பெண்ணுடன் பச்சைமலையில் உள்ள மங்களம் அருவிக்கு குளிக்க சென்றனர். அங்கு அருவிக்கு செல்லும் பாதையில் இருந்த தடைகளை அகற்றிவிட்டு, அவர்கள் குளிக்க சென்றுள்ளனர். மங்களம் அருவியின் தண்ணீர் விழும் தடாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரின் ஆழம் தெரியாமல், அவர்கள் குளிப்பதற்காக அருவியையொட்டி உள்ள பகுதியில் இருந்து குதித்ததாக தெரிகிறது.
2 பேர் சாவு
இதில் தமீம், ஜெஸ்வந்த் ஆகியோர் தண்ணீருக்குள் இருந்த பாறையில் மோதியுள்ளனர். மேலும் நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்க தொடங்கினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விசாந்த் அவர்களை காப்பாற்ற முயன்றதாக தெரிகிறது. அப்போது விசாந்தும் தண்ணீரில் மூழ்கினார். அவர்களுடன் வந்த பெண், அதைக்கண்டு அபயக்குரல் எழுப்பினார்.
சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த மலைவாழ் இளைஞர்கள் அங்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்டனர். இதில் தமீம், ஜெஸ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. விசாந்த் உயிருக்கு போராடினார்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், சம்பத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடிய விசாந்த், துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இது பற்றி இறந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பதறியடித்து கொண்டு வந்த பெற்றோர்கள், மாணவர்களின் உடலை பார்த்து கதறி அழுதது, அதனை காண்பவர்களையும் கண்கலங்க செய்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.