செங்கல்பட்டு
திருப்போரூரில் குளத்தில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் சாவு
|திருப்போரூரில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
குளத்தில் குளிக்க முடிவு
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த சாத்தான் குப்பம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் முகேஷ் (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் உதயகுமார் (19). முனியன் என்பவரது மகன் விஜய் (19). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
முகேஷ் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். உதயகுமார் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். விஜய் 10-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். விஜயின் உறவினர் வீடு திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடம் அருகே உள்ளது. உறவினர் வீட்டுக்கு சென்று அங்குள்ள குளத்தில் குளித்துவிட்டு வரலாம் என்று முகேஷ், உதயகுமார், விஜய் 3 பேரும் முடிவு செய்தனர்.
சாவு
இதையடுத்து நண்பர்கள் 3 பேரும் வீட்டில் இருந்து கிளம்பி திருப்போரூர் வந்தனர். அங்குள்ள உறவினர்களை சந்தித்து விட்டு 3 பேரும் குளத்தில் இறங்கி மேல் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி துணி துவைத்தனர். பின்னர் குளிக்க இறங்கிய போது பாசி படிந்திருந்த படிக்கட்டுகளில் கால் வழுக்கி எதிர்பாராத விதமாக ஒருவர் பின் ஒருவராக 2 பேர் குளத்தில் விழுந்து மூழ்கினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் அவர்களை காப்பாற்ற குளத்தில் குதித்தார். இதில் அவரும் குளத்தில் மூழ்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சிறுசேரி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி அவர்கள் 3 பேரையும் பிணமாக மீட்டனர்.
இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.