விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் பலி தாளாளர் கைது
|மீஞ்சூரில் பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 2 துப்புரவு பணியாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக தாளாளர் கைது செய்யப்பட்டார்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் நேதாஜி நகரில் இம்மானுவேல் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி முதல் பிளஸ்-2 உள்ள வகுப்புகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் பள்ளியில் அடிப்படை வசதிகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அப்போது பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பள்ளி நிர்வாகத்தினர் மீஞ்சூர் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களாக கோவிந்தராஜ் (வயது 45), மற்றும் சுப்புராயலு (45) அழைத்தனர். அவர்கள் 2 பேரும் நேற்று பள்ளிக்கு சென்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்துக் கொண்டிருந்தனர்.
விஷவாயு தாக்கி பலி
அப்போது கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி கோவிந்தராஜ் மயங்கி விழந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சுப்புராயலு உள்ளே இறங்கினார். இதில் அவரும் விஷவாயு தாக்கி மயங்கி உள்ளே விழுந்தார். இருவரும் வெளியே வராத நிலையில் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், பொன்னேரி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கழிவு நீர் தொட்டியை உடைத்து 2 பேரையும் மீட்டனர். விஷவாயு தாக்கியதில் 2 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாளாளர் கைது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் போலீசார் 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆவடி இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையர் மணிவண்ணன், உதவி ஆணையர் கலியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், முறையாக அனுமதி இல்லாமல் துப்புரவு பணியாளர்களை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய அழைத்தது தெரிய வந்தது. எனவே சென்னை அயனாவரத்தை சேர்ந்த பள்ளி தாளாளர் சிமியோனை ( 63) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.